Monday, July 27, 2009

நாட்டு நடப்பு

வட்டமிடும் காளையரும் வாள்விழியை வீசி,
வளையவரும் பூவையரும் பார்வைசுகம் காண்பர்.
மட்டரக சரக்குவிற்கும் வணிகரையும் கொண்ட
மரியாதை அற்றதொரு சந்தையது தேக்கா!
எட்டுமணி அதிலிருந்தே எட்டுமணி வரைக்கும்
என்னென்பேன்,பங்குசந்தை பரபரப்பு போலாம்.
வெட்டிமுறிக் கின்றவரோ?வேட்டையிட வந்தார்.
வேண்டாமே!ஞாயிற்றுக் கிழமைவர வேண்டாம்.

எள்ளிடவும் இடமில்லை,எங்கணுமே தலைகள்
இரத்தம்போல் சுழன்றுவரும் பணவோட்டம்;கூட்டம்
தள்ளிடவும் இடறிடவும் தாவிடவும் செய்யும்.
தணிக்கைப்போல் குடிநுழைவுத் துறையினரும் உலவும்
கொள்ளிடம்போல் வீதிகளில் கற்பனைகள் கோடி.
கொள்ளிப்பேய் குதர்க்கப்பேய் முகவரிகள் கொண்டோர்
அள்ளிடுவோம் செல்வமென ஆசையலை வீச
அடிதடியும் குடிவெறியும் அரங்கேற்றுகின்றார்.

பண்டிகைநாள் புற்றீசல் அங்காடி வைத்து,
பழசுகளைப் புதுசுகளாய்ப் பதப்படுத்தி விற்க
சண்டியரைத் துணைவைத்து மடிபிடிக்கும் வணிகம்
சற்றேனும் கூசாமல் செய்கின்றார்;சீச்சி!
வண்டிகளோ தேக்காவில் சாலைவிதி திணற
வருவார்க்கும் செல்வார்க்கும் நாகரிகம் கூச;
முண்டைகளும் மோழைகளும் நடுவீதி மறிக்க
மோசடியார் சிலபேரால் முகம்போச்சு நமக்கே!
----------------------------------


"ஆடம்பரம்"

தீபாவளிப் புடவைக்கும் தீராவெறி நகைகட்கும்
தேறாதடி விருந்துக்கும் சம்பளங்கள்.-அடி
மாபாவியென் றமைந்தாயே!மாறாதவுன் பகட்டுக்கு
மடியேந்திடஎவர்காலில் போய்விழுவேன்?

நாயாயலைந் தடிநாக்கு மோவாய்வரை வெளிதள்ள
நாடாதவர் சிலர்நட்பைப் போயிரந்தேன்.-வெறும்
வாயால்சிலர் நலம்கேட்டார்,"வாய்யா" என,வசைவைத்தார்
"போய்வா"எனச் சிலர்போனார்,வாய்மறந்தேன்

பிறப்பானது வரமென்பார். நமக்கோஅதில் வரமைந்து
பேய்ப்போன்றது பிழைகொண்டு தோன்றியது.-இதை
மறப்போமென துறவுக்கே மனம்மாறிடும் பொழுதெல்லாம்
மரியாதையை அதுபோக்கிடும் என்றிருந்தேன்.

தேநீர்க்கடைச் சந்திப்பில் ஒருநாளொரு துணைநண்பர்
தெரியாதது போல்நடந்தார்,நான்மறித்தேன்.-அட
ஏன்,நீர்மறந் தீரென்றேன்."தீபாவளி அலைச்சல்தான்,
இருந்தால்கொடும் இருநூறே"என்றிரந்தார்.

கை,ஈபவன் மரப்பாவை,கால்காட்டுவன்,திருப்பாவை
காட்டாதன உரு,காட்டிடும் அக்கடவுள்-ஐயோ!
மெய் ஈபவன் எனச் சொன்னார்.வெறுமேவரும் திருநாளால்
மிதிபட்டிட எனைவைத்து விட்டவனே!

சூறாவளி எனவந்த தீபாவளி இடிபாட்டில்
சுக்கானதென் மனமெல்லாம் சிரித்தழுதேன்.-வழி
மீறாதயிவ் வழிபாட்டில் யார்மானமும் போனாலும்
வீட்டோடழு வெளியில்போய் புன்னகைப்பாய்.
---------------------------------

Friday, April 17, 2009

உண்மையும் உருவகமும்.

புராணங்களில் சில காட்சிகள் மூட நம்பிக்கைகளாய்க்
காட்சியளிக்கும்.ஆனால் அவற்றில் ஓர் உண்மை
ஒளிந்திருக்கும் அவற்றில் ஒன்று இங்கே:

அசுரர்களும் தேவர்களும் பாற்கடலைக் கடைந்தார்கள்.
[நோக்கம் என்னவென்று புராணம் அறிந்தவர்க்குப்
புரியும்]அமுதம் எழுந்தது.அதன்பின் என்ன நடந்தது.
அமுதம் பங்கிட்டுக்கொள்வதில் இழிவான நடைமுறை
பின்பற்றப்பட்டது.

இங்கே இந்திய சுதந்திரப் போராட்டத்தை நினைவு
கொள்ளுங்கள்.இதில் அமுதம் அருந்தியவர்கள் யார்
நஞ்சருந்தியவர்கள்யார்.இரண்டுக்கும் இடைபட்டவர்
யார்?

இப்போதும் உலகெங்கிலும் பாற்கடல் கடைகின்ற
காட்சிகளைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றோம்.
ஆனாலும் காட்டிக்கொடுப்பவனே நாடாளும்
காட்சியைப் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றோம்.
நேதாஜியை,பட்டேலை மறந்ததன் விளைவு
இன்று இந்தியாவே அதை அனுபவித்துக்கொண்டு
இருக்கின்றது.

Friday, April 10, 2009

கம்ப நயம்

இராமாயணத்தில் கரன் வதைபடத்தில் ராமனின் அம்புகளுக்கு
ஆற்றாது அஞ்சி ஓடும் வீரர்களுக்கு கரன் வீரவுரை கூறுவதாக
உள்ள பாடல்:

சினத்தால் சிவக்கப்பெற்ற கண்கள்,அச்சத்தால் பால்போல்
வெளுக்கப்பெற்றவர்களே!உடைந்த மரக்கொம்புகள் நிறைந்த
காட்டில்,போருக்கு ஆற்றாது ஓடுபவர்களே!உங்கள் இல்லத்தில்
மனையாளிடம் முதுகையும் ஊடுருவிய அம்பைக் காட்ட
போகிறீர்களா?இல்லை,கொம்பு காட்டபோகிறீர்களா?
சற்று நில்லுங்கள்.

செம்பு காட்டிய கண் இணை பாலெனத் தெளிந்தீர்!
வெம்பு காட்டிடை நுழைதொறும்,வெரிந் உற பாய்ந்த
கொம்பு காட்டுதி ரோ,தடமார்பிடைக் குளித்த
அம்பு காட்டுதி ரோ,குல மங்கையர்ககு?அம்மா!

சொல்லும்,பொருளும்.

செம்பு=சிவப்பு.வெம்பு=வருத்துகின்ற,[வினைத்தொகை]
வெரிந்=முதுகு.கொம்பு=உடைந்த மரக்கிளை.

--------------------------------

Thursday, April 9, 2009

கம்ப சித்திரம்

கம்பன் கவிதையில் சொல்விளையாட்டும்
பொருள்விளையாட்டும் அளவிடவியலாதவை.
அவற்றில் நான் சுவைத்தவை சில:

ஆற்றுப் படலத்தில் வெள்ளத்தின் தீவிரத்தை
அரண்மனைக் கொட்டிலில் கட்டப்பட்ட யானைக்கு
உவமையாக்கும் அழகியலை ராமாயணத்தில் காணலாம்.

கதவினை முட்டி,மள்ளர் கையெடுத் தார்ப்ப எய்தி,
நுதலணி ஓடை பொங்க,நுகர்வரி வண்டு கிண்ட,
ததைமணி சிந்த உந்தி,தறியிற தடக்கை சாய்த்து,
மதமழை யானை என்ன,மருதம்சென் றடைந்த தன்றே!

பொருள்:

யானை,கொட்டிலின் கதவை முட்டி,போர் வீரர்கள்
கைகளைத் தூக்கி ஆரவாரம் செய்ய, நெற்றியில்
முகபடாம் ஆடும்படி கட்டுத்தறியை அறுத்துக்கொண்டு
யானையின் மதநீரை வண்டுகள் சூழ்ந்து மொய்க்க
கழுத்தில் கட்டப்பட்ட மணிகள் ஒலி செய்ய,கட்டுத்தறியையும்
அறுத்துக்கொண்டோடுவதுபோலும்:

வெள்ளம்,அணைக்கட்டின் கதவை முட்டி,மதகின் தண்ணீர்
திறந்து விடும் தறி என்னும் குதிரை மரம் இற்று விழும்படி
செய்து,உழவர்கள்,அச்சமுற்று கைகளைத் தூக்கி ஆரவாரம்
செய்ய, ஆற்றுக்கு முன்பக்கமுள்ள ஓடை போன்றுள்ள
சிறு நீர்நிலையும் பொங்கிவழியும்படி அடித்துச்செல்லப்படும்
மலையில்,மரக்கிளையில் சூழ்ந்த வண்டுகள் ஆரவாரம்
செய்ய,பொன்னையும் மணியையும் அடித்துச் செல்லும்
வெள்ளம், வயல்களைச் சென்றடைந்தது.

ஒருசொல் இருபொருள்:

கதவு=யானைக்கொட்டிலின்கதவு,மதகின்கதவு.
மள்ளர்=போர்வீரர்,உழவர்.
நுதல் அணி ஓடை=யானையின் முகபடாம்,
சிறிய நீர்நிலை.
யானையின் மதநீரில் மொய்க்கும் வண்டு,தேனடையில்
மொய்க்கும் வண்டு.
மணி=யாணையின்மணி,நவ ரத்தின மணி.
தறி=கட்டுதறி,குதிரைமரம்.
கை=தும்பிக்கை,அலைகளாகிய கை.
பருப்பொருள்-யானைசெய்யும் செயலை வெள்ளம் செய்தது.

------------------------------------------

Tuesday, April 7, 2009

தமிழ்த் தாய்க்கு நேர்த்திக்கடன்

பக்தி மிகுந்தநம் மக்கள் செய்யும் நேர்த்திக்கடன்:
தீ மிதிப்பது,அலகு குத்திக்கொள்வது,கற்பூரம் காட்டுவது
முடிமழிப்பது,புழுதியில் அங்கம்புரள்வது,என பலவகை,

ஆனால்,தமிழ்த்தாய்க்கு சிலர்மட்டுமே செய்யும் நேர்த்திக்கடன்:


கரியாகும் நெருப்பல்ல கடப்பாரை அலகல்ல
கற்பூரச் சுடரல்ல முடியல்ல-தமிழ்த்தாய்
அரியா சனத்தாள்க்கே அதுநேர்த்திக் கடனல்ல
அவள்கோபம் தணிக்கின்ற செயலல்ல!

நூற்றாண்டி ருபத்தொன்றில் நுழைவுற்றும் பலகற்றும்
நோக்கத்தில் பழுதென்றால் அதைமாற்று,-கொள்கை
ஆற்றாத செயலெல்லாம் அசதிக்கொண் டுறங்கிற்றே,
அடிமைக்குள் புதையாதே தலைதூக்கு.

புரண்டங்கம் புழுதிக்குள் திருக்கோவில் வலம்வந்து
புரியாத மொழிபாடும் வழிபாட்டில்-திகைப்பில்
அரண்டங்கு நடுக்குற்றும் அருள்வந்து மலையேற்றும்
திருநீற்றை அடிக்காதே தமிழ்த்தாய்க்கே.

அறிவோற்றும் திருநாட்டில் அடைமானம் குலமானம்
ஐயயோ!என கேட்கும் குரல்ஈனம்.-நம்மைப்
பொறிவைத்து பிடிப்பானைப் பொறிக்குள்ளே புகுத்திப்பின்
புகழுக்குள் புகுத்திக்கொள் அது மானம்.

குலத்துக்காம் புகழொன்றே திருநேர்த்திக் கடனாகும்
குடிமைக்கும் அதுகாப்பு வீறாப்பு-வாழும்
புலத்திற்குள் மொழித்தெய்வம் குடிவாழும் இலையென்றால்
புலனற்ற பிண்டத்தின் நிலமாகும்.


நாத்திகன்வேள்வி:அருண்முல்லை.

சித்திரக் கவி

நான்வச மாடாநாண் நாட விரைவிட
நாண்நாடா மாசவன் நா. [குறள்வெண்பா]

மாலைமாற்று,என்று வகைப்படுத்தப்பட்ட இக்கவிதையில்
முன்னிருந்து பின்னாகவோ, பின்னிருந்து முன்னாகவோ,
வாசித்தால் ஒன்றேபோல் வருவது.
இதன் பொருள்: நான் வசப்பட்டுப்போகாத நாணத்தை
விரும்பி நாடுகின்றேன்.அவன் நாவோ காதலைப்பற்றி
சற்றும் நாணமில்லாமல் பேசவல்லதாக இருக்கிறது.


நாத்திகன்வேள்வி:அருண்முல்லை.

Monday, April 6, 2009

புதிர் வெண்பா

கண்ணுண்டு வாயுண்டு கண்டால் பகையிடத்தும்
எண்ணிச் செயலாற்றும் என்றாலும்-மண்ணிலே
சிந்திக்கும் மூளையுயிர்;சேர்ந்த தலையில்லை
நிந்திப்பார் இல்லை நிலை.

விடை: நண்டு

நாத்திகன்வேள்வி:அருண்முல்லை.